Thursday, 17 November 2011

பிஸியோதெரபி மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளும், அவர்களின் சமுதாயக் கடமையும்


             உடல் இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி) இன்று உலக அளவில் ஒரு வளர்ச்சியடைந்த நவீன மருத்துவ முறையாகும். மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி வளர்ச்சியடைந்த இம்மருத்துவமுறை இன்று இந்தியாவிலும் பரவலாக பின்பற்றப்படும் மருத்துவமுறையாக உருவெடுத்துள்ளது.

 உடலியக்க செயல்பாட்டை விஞ்ஞான ரீதியாக அறிந்து உடலியக்க குறைபாடுகளைப் போக்கும் நவீன மருத்துவ வடிவமாக இன்று பிஸியோதெரபி மருத்துவம் வளர்ந்துள்ளது. வலியைத் தோற்றுவிக்கும் அனைத்து உடல் குறைபாடுகளை பின்விளைவு ஏற்படுத்தாத வகையில் சரி செய்வதாகவும்; வலுவிழந்த தசை, தசைநார், நரம்புகளை உடலியக்க அணுகுமுறையில் வலுப்படுத்துவதாகவும்; இதய சம்பந்தமான நோய்களின் உடலியக்க பயிற்சிகளின் மூலம் சரி செய்வதாகவும்; மூளை வளர்ச்சி கோளாறுகள் மேலும் பெண்களுக்கு பொதுவாகவும் குறிப்பாக கர்ப்ப காலங்களில் ஏற்படும் உடலியக்க கோளாறுகளை சரி செய்வதாகவும்; எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உட்பட அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் மிகவும் தேவைப்படக்கூடிய ஒரு உடன் மருத்துவமாகவும்; நூறு சதவீதம் உடலியக்க நோய்களுக்கான பிரிக்க முடியாத மருத்துவமுறையாக பிஸியோதெரபி மருத்துவம் இன்று வளர்ச்சியடைந்துள்ளது.


            வலி சம்பந்தமான உடலியக்க நோய்களுக்கு இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் வலி நிவாரண மருந்துகள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. இதனால் மேலை நாடுகளனைத்திலும் வலி நிவாரண மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் மீச்சிறு பக்க விளைவுகளையே ஏற்படுத்தக்கூடிய பிஸியோதெரபி மருத்துவம் சிறிது சிறிதாக மக்கள் அனைவராலும்  ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், உடலியக்க நோய்களுக்கு மக்கள் தேர்ந்தெடுக்கும் முதல் மருத்துவ முறையாகவும் இன்று நிலை பெற்றுள்ளதில் எவ்வித ஆச்சர்யமுமில்லை. மருத்துவ துறையில் உலக அளவில் நிகழும் அனைத்து வளர்ச்சிப் போக்குகளையும், நவீன ஆய்வு முடிவுகளையும் கணக்கில் கொண்டு உருவாக்கப் பெற்ற மேம்பட்ட பாடத்திட்டம் கொண்டு தற்போது நான்கரை ஆண்டுகால மருத்துவ பட்டப் படிப்பாக இந்தியா முழுவதிலும்  சுமார் 500க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் பிஸியோதெரபி மருத்துவப் படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் இம்மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களே.
 தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் சென்னையில் என இரண்டே இரண்டு அரசு பிஸியோதெரபி கல்வி நிறுவனங்களே உள்ளன. மற்ற துறைகளுக்கான அரசுக் கல்லூரிகளைப் போல் இக்கல்லூரிகளிலும் கல்வித்தரம் தரைமட்டமானதாகவே உள்ளது.


           பிஸியோதெரபி மருத்துவத்திற்கான முதுகலைப்படிப்போ இவ்விரண்டு கல்லூரிகளிலும் இல்லை. மாறாக, அரசுக் கல்லூரிகளில் நிலவும் கல்விக் கட்டணத்தைப் போல் பலமடங்கு கூடுதலாக சுயநிதி தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. குறிப்பிட்ட சில சுயநிதி கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளில் உட்கட்டமைப்போ, மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரமோ பின்பற்றப்படுவதில்லை.

 இவ்வாறாக இந்தியா முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும்  6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிஸியோதெரபி மருத்துவர்களாக பட்டம் பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் இவ்வெண்ணிக்கை ஆண்டிற்கு 1000க்கும் மேற்பட்டதாகும்.


          1960களில் முழுமை பெற்ற மருத்துவப் படிப்பாக வளர்ச்சியடைந்த பிஸியோதெரபி மருத்துவத்திற்கான தேவை அதிகளவில்  1980கள் வரை இந்தியா மற்றும் குறிப்பாக அயல்நாடுகளில் பட்டம் பெற்ற அனைவரும் வேலை வாய்ப்பை பெறும் வகையிலானதாக இருந்தது. இப்போக்கினால் பிற்காலங்களில் உயர்கல்வித் துறைகளில் மாணவர்களால் பெரிதும் தெரிவு செய்யப்படக்கூடிய துறையாக பிஸியோதெரபி மருத்துவத்துறை விளங்கியது. சமகாலங்களில் கல்வியில் தனியார்மயம் கட்டவிழ்த்து விடப்பட்டு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளைப் போல் பிஸியோதெரபி மருத்துவ கல்லூரிகளும் புற்றீசல் போலப் பல்கிப் பெருகின. ஆண்டுதோறும் இக்கல்வி நிலையங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் பட்டம் பெற்று வெளிவரும் பிஸியோதெரபி மருத்துவர் களுக்கான வேலை வாய்ப்புகள் சரியான விகிதத்தில் உருவாக்கப் படுவதில்லை. மாறாக அவர்களுக்கான ஊதியம் தற்காலங்களில் மிகவும் குறைத்து வழங்கப்படுகிறது. குறிப்பாக, தனியார் மருத்துவ மனைகளில் ரூபாய் 1000 அல்லது 2000 மட்டுமே மாதச் சம்பளமாக வாங்கும் நிலைக்கு பிஸியோதெரபி மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். உச்சகட்ட இலாப நோக்கையே அடிப்படையாகக் கொண்ட இச்சமூக அமைப்பில் சிறிது சிறிதாக பிஸியோதெரபி மருத்துவர்களின் தேவை குறையத் துவங்கியுள்ளது. இப்போக்கு இன்று பொறியியல் துறையிலோ, சேவைத் துறையிலோ ஏற்பட்டுள்ள போக்கிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதல்ல.


              பிஸியோதெரபி மருத்துவப் படிப்பிற்காக பின்பற்றப்படும் பாடத்திட்டம் - நோயின் தன்மையை ஆராய்ந்து அது எவ்வகையான நோய் என்பதைக் கணிக்கும் திறமை பெற்றவர்களாக பிஸியோதெரபி மருத்துவர்களை உருவாக்குகிறது. நோய்களை குறிப்பாக உடலியக்க நோய்களை சரியாகக் கணிக்கும் ஆற்றலையும், அந்நோய்களை பக்க விளைவுகளின்றி குணப்படுத்தும் திறமையையும் கொண்ட  பிஸியோதெரபி மருத்துவர்களைக் கண்டு பொது மருத்துவம் குறிப்பாக எலும்பு முறிவு சிறப்பு மருத்துவம் படித்தவர்கள் சிலர் மத்தியில் சிறிது சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
 ஆனால் மருத்துவத்தின் அனைத்து வளர்ச்சிப் போக்குகளையும் ஒன்றினைத்து வழங்கப்படும் மருத்துவமே சரியான மருத்துவம் என்ற ரீதியில் செயல்பட்டு வரும் மருத்துவர்கள் பிஸியோதெரபி மருத்துவத்தை வளர்ச்சிக்கண் கொண்டே பார்க்கின்றனர். சமூக அக்கறையுள்ள இக்குணாம்சம் கொண்ட மருத்துவர்கள் இன்றைய சமூகத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பது கேள்விக்குறியே.


           மக்கள் தேவைக்கான சரியா மருத்துவம் என்பது மருத்துவத்தின் அனைத்து துறைகளையும், அவற்றின் விஞ்ஞான ரீதியிலான வளர்ச்சிப் போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டிய ஒருங்கிணைந்த மருத்துவமேயாகும். அப்பொழுதே மருத்துவம் முழுமையான மருத்துவம் ஆகிறது. உச்சகட்ட இலாப நோக்கை அடிப்படையாகக் கொண்ட இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் மருத்துவம் மக்கள் தேவைக்கான மருத்துவமாக இருப்பதில்லை.
 எனவே சொந்த கிளினிக்குகள் மூலம் சுயதொழில் செய்து வாழ்க்கையை ஓட்டலாம் என்ற பிஸியோதெரபி மருத்துவர்களின் கடைசி முயற்சியும் குறிப்பாக கார்ப்பரேட் மருத்துவமனையின் வலுத்த கரங்களாலும், சிறிய தனியார் மருத்துவமனையின் மருத்துவர்களாலும், பொதுவாக மருத்துவர்களாலும் நசுக்கப்பட்டு வருகிறது.

  
           நிர்மூலமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு, கார்ப்பரேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கொடுஞ்சுரண்டல், மருத்துவர்களுடனான பனிப்போர் ஆகியவை பிஸியோதெரபி மருத்துவர்களை வாழ வழியின்றி நிர்க்கதியாக்கியுள்ளது. ஆளும் அரசாங்கங்கள் தம் நிலை அறிந்து இப்பிரச்சிçக்கு தீர்வு காணும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதற்கொண்டு அரசு மருத்துவமனைகளில் உரிய வேலை வாய்ப்பினை உருவாக்காதா? என்ற அபிலாசையில் கணம்தோறும் தனியாகவோ, சங்கங்களாகவோ இணைந்து இப்பிரச்னையை அரசின்முன் நிறுத்துகின்றனர். ஆனால் அம்முயற்சியும் அதன் எதிர்வினையான அரசின் செயல்பாடும் ஒரு கானல்நீராகவே உள்ளது.


           முதலாளித்துவ சமூகத்தின் கூரிய முரண்பாடான தொழிலாளி - முதலாளி வர்க்க முரண்பாடு பிஸியோதெரபி மருத்துவர்களின் மத்தியில் மிகக் கூர்மையடைந்துள்ளது. அதன் விளைவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் தொழிலாளர் அமைப்புகள் போல் பல்வேறு பிஸியோதெரபி மருத்துவர்களின் அமைப்புகள் தோன்றியுள்ளன. தோன்றி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அமைப்பு இந்திய அளவில் பிஸியோதெரபி மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்திய பிஸியோதெரபி மருத்துவர்கள் அமைப்பாகும் (The Indian Association of Physiotherapists - IAP).
 மற்றபிற மருத்துவத்துறைகளுக்குள்ளது போல் அகில இந்திய அரசு அமைப்பு பிஸியோதெரபி மருத்துவர்களுக்காக உருவாக்கப்பட வேண்டும், அரசு வேலை வாய்ப்புகளை பிஸியோதெரபி மருத்துவர்களின் சமூகத் தேவைக்கேற்ப உருவாக்கிட வேண்டும் போன்ற சரியான கோரிக்கைகளை உரக்கக்கூட எழுப்ப முடியாமல் அவ்வப்போது முனகல்தொனியில் எழுப்பும் அமைப்பாகவே  இந்த இந்திய பிஸியோதெரபி மருத்துவர்கள் அமைப்பு (IAP)இன்று செயல்பட்டுக்கொண்டுள்ளது. தொழிற்சங்க கோளாறுகள் அதன் மொத்த உருவில் இவ்வமைப்பில் தற்சமயங்களில் அரங்கேறிக் கொண்டுள்ளது.

பிஸியோதெரபி மருத்துவர்களுக்கான முறையான அரசு அமைப்பு (நேஷனல் அண்ட் ஸ்டேட் கவுன்சில் )இல்லாத சூழ்நிலையில் இவ்வமைப்பு கல்லூரிகளுக்கான அனுமதிக் கட்டணம், அயல்நாடு செல்பவர்களுக்கான நற்சான்றிதழ் கட்டணம், அமைப்பில் உறுப்பினராவதற்கானத் தேர்வுக் கட்டணம், ஆண்டுதோறும் நடைபெறும் அமைப்பின் மாநாட்டிற்கான கட்டணம் என ஏற்கனவே விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் பிஸியோதெரபி மருத்துவர்களிடம் பறிக்கப்பட்டு பணம் கொழுத்த அமைப்பாக இந்திய பிஸியோதெரபி மருத்துவர்கள் (ணூபுP)அமைப்பு இன்று மாறிப்போயுள்ளது. பணம் சுருட்டும் நோக்கம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட நிர்வாகிகளை உடைய இவ்வமைப்பு பிஸியோதெரபி மருத்துவர்களுக்காக எந்தவொரு குறிப்பிட்ட முன்னேற்றத்தையும் அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை கொண்டு வரவில்லை. மாறாக இன்று கோஷ்டிப்பூசலின் உச்சகட்டத்தில் இவ்வமைப்பு உள்ளது. சமீபத்தில் இவ்வமைப்பின் செயலர்களுக்காக நடைபெற்ற ௨௦௧௧ - 2013 நிர்வாகிகள் தேர்தல் இப்போக்கை உரக்க பறைசாற்றுகிறது.


          இவ்வமைப்பின் பிற்போக்கான செயல்பாடுகளின் மூலம் ஒருகாலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் நிலை பெற்றிருந்த இவ்வமைப்பு (IAP)இன்று உள்நோக்கம் கொண்ட சிலரை மட்டுமே உடைய அமைப்பாக சுருங்கிப் போயுள்ளது. குறிப்பாக இவ்வமைப்பு தமிழ்நாட்டில் இவ்வமைப்பே இன்று இல்லை என்று சொல்லுமளவிற்கு உடைந்து நொறுங்கிப்போயுள்ளது.
 நான்கரை ஆண்டுகால சிறப்பு மருத்துவப் பட்டம் பெற்றும் வேலை வாய்ப்பின்றி வாழ்க்கையின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ள இந்த நவீன பிஸியோதெரபி மருத்துவ தொழிலாளர் வர்க்கம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணம் உருவாகியுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் போன்ற முதலாளித்துவ நிறுவனங்களுக்கு துணைபோகும் மத்திய, மாநில அரசுகளை பிஸியோதெரபி மருத்துவர்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்காக நிர்ப்பந்திக்க வேண்டிய சூழ்நிலை மிகவும் கூர்மையடைந்துள்ளது.


           தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கையாளும் இந்திய பிஸியோதெரபி மருத்துவர்கள் அமைப்புகள்(IAP) போலன்றி தொடர் இயக்கங்களை, நீண்ட நெடிய போராட்டங்களை எடுக்கத் துணிந்த அமைப்பாக பிஸியோதெரபி மருத்துவர்கள் உருவெடுக்க நேரம் வந்துவிட்டது. அவ்வகையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய சரியான அமைப்பாக உருவெடுத்து, சரியான போராட்டப்பாதையில் செயல்பட, போராட்ட பாதையை வலுப்படுத்த பிஸியோதெரபி மருத்துவர்களே ஒரு சரியான அமைப்பாக அணி திரள்வீர்! அரசின் செயல்பாடுகளால் அரசு மருத்துவமனைகளில் இந்நவீன மருத்துவம் கிடைக்காமல் அல்லாடும், முதலாளி வர்க்கத்தின் கொடுஞ்சுரண்டலுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கமே! உழைக்கும் வர்க்கமே! ஆதரவு தாரீர்!

  போராடுவோம்! வெல்வோம்!    

கோரிக்கைகள்!
1. தமிழக அரசே! சமூகத் தேவைக்கேற்ப பிஸியோதெரபி மருத்துவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வேலையில் அமர்த்திடு!
2. பிஸியோதெரபி மருத்துவர்களின் நலன் காக்கும் வகையில் மத்திய, மாநில அரசு அமைப்புகளை (நேஷனல் அண்ட் ஸ்டேட் கவுன்சில்)உருவாக்கிடு!
3. திறம்பட ஆராய்ந்து, நோயைக் கணித்து மருத்துவம் வழங்கும் திறமை பெற்ற பிஸியோதெரபி மருத்துவர்கள் மருத்துவர்(Dr) என்ற பெயர்முன்குறி(Prefix) உபயோகப்படுத்தும் உரிமையைத் தடை செய்யாதே!
4. சமூகத் தேவை அளவிற்கு அரசு பிஸியோதெரபி மருத்துவக் கல்லூரிகளைத் திறந்திடு. கல்வித் தரத்தை உயர்த்திடு!
5. தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பிஸியோதெரபி மருத்துவர்கள் உரிய ஊதியம் பெற்றிட வகை செய்!




பிஸியோதெரபிஸ்டுகளுக்கான இயக்கம்